அக்கப்போர்
பத்திரிக்கை உலகில் 'அக்கப்போர்' வாராந்தரி ஆரம்பத்தில் பத்தோடு பதினொன்றாக இருந்தது. அதாவது உயிர் மட்டும் தான் இருந்தது 'தடாலடி' என்கிற புது எழுத்தாளர், வாசகர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு எழும்படி எழுத ஆரம்பிக்கும் வரை. வித்தியாசமாக ஈர்க்கும் விதமாக எல்லோரும் சிலாகிக்கும் ஏதோ ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது. அதை அலசி ஆராய்ந்து கடைசியில் அது ஒரு அபத்தம் என்று (கு)தர்க்க வாதங்களினால் ஸ்தாபிக்க வேண்டியது. ஆனால் அவர் தரப்பு வாதத்தை சுலபமாக மறுக்க முடியாதபடி எழுதுவதுதான் அவரது சாமர்த்தியம் . எல்லா இடத்திலும் எப்போதும் பொதுஜன கருத்தை துவேஷிக்கும் கோஷ்டி ஒன்று சமூகத்தின் அங்கமாக இருக்கும் அல்லவா ! அத்தகைய கோஷ்டியின் ஆதரவு தான் எப்பொழுதும் அவர் எழுத்தை அணையாத அக்னியாக காத்துக்கொண்டு இருந்தது!
இந்த விசேஷ எழுத்து வாசனை ஒவ்வொரு வாரமும் மற்ற வாசகர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்க ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும். எதிர்ப்போர் இல்லாமல், எதிர் போர் இல்லை. இப்படி ராஜபாட்டையில் சுகமாக பயணித்துக் கொண்டிருந்த தடாலடியின் எழுத்துக்களுக்கு , இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சுவாரஸ்யம் கூட்டும் பொருட்டோ என்னவோ எதிர்வாதம் பண்ணக் கூடிய அளவிலே 'தர்ம அடி' என்ற பெயரில் வசீகர எழுத்துகளுக்கு சொந்தக்காரர் ஒருவர் திடீரென முளைத்திருந்தார்!
சுருங்கச் சொன்னால், ஒவ்வொரு 'தடாலடி' கருத்துக்களுக்கும் பதிலடியாக ' தர்ம அடி' பலமாக கிடைக்க ஆரம்பித்தது. இந்த இரண்டு அடிகளும் மாறி மாறி விழுந்ததால், பத்திரிக்கையின் ஓட்டம் ஒரேயடியாக ஏற்றம் கண்டது. பத்திரிக்கையின் ஓட்டத்தைப் பார்த்து நடுவில் ஒருமுறை விலையைக் கூட ஐந்து பைசா உயர்த்தி விட்டார்கள் என்றால்!
உதாரணமாக முதல் வாரம் , ஒரு பிரபல மூன்றெழுத்து அந்தக்கால எழுத்தாளர், தனது சிறுகதை ஒன்றில், 'தாயுமான சுவாமிக்கு திருமஞ்சனம் செய்ய ஜலம் எடுத்து வருவது' என்று எழுதியிருந்தார். உண்மையில் அவர் அபிஷேகம் செய்ய தீர்த்தம் கொண்டு வந்தார் என்று தான் சம்பிரதாயம் பிரகாரம் சொல்லி இருக்க வேண்டும் என்பது தடாலடியின் வாதம். ஏனெனில் திருமஞ்சனம் என்பது வைஷ்ணவர்களின் வார்த்தையாம்! இந்த நுணுக்கமான வேறுபாட்டை மேற்படி பிரபல கதாசிரியரின் எழுத்துக்களை படிக்கும் போது யாரும் கவனிக்கவில்லை அல்லது பெரிதுபடுத்தவில்லை.
'தர்ம அடி'உடனே அடுத்த வாரம் இதற்கு பதிலாக 'கதையின் ஓட்டம் தான் முக்கியம். கதை சொல்லும் கருத்து அதைவிட முக்கியம். பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதே பத்திரிகைகளின் லட்சியமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது உழக்கிற்குள் 'கிழக்கு மேற்கு பார்க்கும்' தடாலடியின் அற்பபுத்தி படைத்த வாதங்களை உதாசீனம் செய்ய வேண்டும் என்கிற தர்மஅடியின் கருத்தை பலரும் ஆதரித்தனர்.
அத்துடன் இந்த விவாதம் முடிந்து விடட்டது.
பிறகு அடுத்த வாரம், தடாலடி அப்போது ஓஹோ என்று ஓடிக் கொண்டிருந்த ஒரு தமிழ் திரைப்படத்தில் 'மலேயாவில் ரயில்' என்று ஒரு புகை வண்டியை காண்பித்தார்கள் என்றும் ஆனால் சற்று கவனமாகப் பார்த்தால் S R என்று, அதாவது சதர்ன் ரயில்வே என்று ஸ்பஷ்டமாக தெரிந்ததாகவும் குறை கண்டார்.
பதில் சொல்லாமல் விடுவாரா தர்ம அடி? படம் எடுத்துப் பார்த்தால் அல்லாவா தெரியும் அதன் கஷ்ட நஷ்டங்கள்! அந்த சினிமாவில் குறிப்பிட்ட எழுத்துக்கள் தெரியும் அந்த காட்சி பகுதியை வேண்டுமானால் வெட்டி இருந்திருக்கலாம்! ஆனால் 'வடையை எண்ணிப்பார் என்றால் துளையை எண்பவர்கள்' மத்தியில் இதெல்லாம் எடுபடாது என்று அங்கலாய்த்தார். படத்தின் கதை நங்கூரம் போட்டார் போல நின்று வசூல் வேட்டை உச்சத்தைத் தொட்டதை தடாலடி மறந்துவிட்டது வியப்பொன்றுமில்லை என்று எள்ளி நகையாடினார்.
பிறிதொரு வாரம் ஒரு புராண திரைப்படத்தில் , பெரியாழ்வார் வேடமிட்டு இருந்த சினிமா நடிகருக்கு மணிக்கட்டு போன்ற சம்பந்தமில்லாத இடங்களில் திருமண் ஸ்ரீ சூர்ணம் தரித்துக் கொண்டிருந்ததாக காண்பித்திருந்தார்கள். அது படு அபத்தம் என்று தடாலடி நக்கீரன் வேடம் போட்டால், அந்த நடிகரில் பெரியாழ்வாரையே தரிசினம் செய்து கண்ணீர் சிந்தியவர்களின் பெரிய ஜாபிதா தன்னிடம் இருக்கிறது என்று பதிலுரைத்தார் தர்ம அடி.
இந்த வாதப்பிரதிவாதங்கள் வாசகர்கள் மத்தியிலும் இரண்டு கோஷ்டிகளை உருவாக்கி விட்டன.
இவர்கள் இருவரும் முறையே மிதவாத தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்கள் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் எழுத்துக்களின் வேகத்தை பார்க்கும் பொழுது, ஏதோ ஒரு நாள் தங்களுக்குள் குஸ்தி போட்டுக் கொள்வார்கள் போல தோன்றியது!
அதிகமாக குதிக்கும் எந்த வஸ்துவும் காலக்கிரமத்தில் அடக்கித்தான் வாசிக்க வேண்டும் என்பது இயற்கை. பத்திரிக்கைக்கு வயதானால் வளர்ச்சி. அதனால் அதன் ஆசிரியருக்கு முதுமையினால் தளர்ச்சி! வேறு வழியின்றி நல்ல விலைக்கு விற்று விட முடிவு செய்துவிட்டார். இதை எப்படியோ தெரிந்துகொண்டு ஒரு படித்த பணக்கார நடுத்தர வயது ஆசாமி சிரஞ்சீவி, அதாவது நம் பத்திரிக்கை ஆசிரியரை, நேரில் காண வந்தார். அவரிடம் 'மிஸ்டர் ராஜன்! என் பத்திரிக்கையின் வளர்ச்சிக்கு இரண்டு முக்கியமான எழுத்தாளர்கள் தான் காரணம் என்பது நீங்கள் அறிந்ததே. ஆகவே நீங்கள் எனக்கு அதிக அளவு பணம் கொடுத்தாலேயன்றி விற்க முடியாது. நான் அவற்றை இரண்டு பகுதிகளாக பிரித்து எனக்கும் அவருக்கும் எடுத்துக் கொள்வேன்' என்றார். தொகை கைமாறியது.
இதுவரை தடாலடி , தர்ம அடி இருவரும் அந்தப் பெயர்களுடன் வெளி உலகத்திற்கு உலா வந்தவர்களை தெரிந்தவர்கள் இல்லை. அதனால், ராஜன் சிரஞ்சீவியிடம் ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் விடுத்தார் தான் மட்டுமாவது அந்த இரண்டு எழுத்தாளர்களையும் நேரில் பார்க்க வேண்டும் என்று.
"அதற்கென்ன நான்தான் தடாலடி!" என்ற சிரஞ்சீவியுடன் மகிழ்ச்சியோடு கை குலுக்கிய ராஜன் "நான் நினைத்தது சரிதான்" என்றார் . 'அதுசரி மிஸ்டர் தர்ம அடி ?அவரையும் அறிமுகப்படுத்தி விடுங்களேன். ஏனெனில் அவர் எழுத்துக்கள் தான் இந்தப் பத்திரிகையை இந்த அளவிற்கு உயர்த்தியது. சொல்லப் போனால் நான் அவரது பரம ரசிகன்' என்று அதிக உற்சாகத்தோடு பேசிய ராஜனை மௌனமாக தன் அருகில் கூப்பிட்டு தனக்கு எதிரே தெரிந்த நிலைக்கண்ணாடியை நோக்கி கையை நீட்டினார். "அதோ நம்மை பார்த்து கையை நீட்டுகிறாரே அவர்தான், திருவாளர் தர்ம அடி"என்றார் பெருமையுடன்!
*****************
Comments
Post a Comment