உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா
எங்கள் ஒன்றுவிட்ட அத்தை ஒருவரின் புகுந்த வீட்டு மாப்பிள்ளை வருகிறார் என்று என் அப்பாவிடம் "நம்மாத்து(?) மாப்பிள்ளை வரார். கொஞ்சம் பாத்து கவனிச்சுக்கோ!" என காதில் போட்டு வைக்க, "டேய் சுதர், நாளைக்கு நம்ம சொந்தக்காரர் ஒருத்தர் வராராம். பாத்து, அந்த முசுட, முருங்க மரத்துல ஏறாம பாத்துக்கோ!" என்று என் அப்பா அதை அர்த்தம் பிறழாமல் மொழிபெயர்த்தார்! இப்படி யாருடைய வீட்டு மாப்பிள்ளைக்கோ 'கருட சேவை' செய்யும் போறாத காலம் எனக்கு. இதன் விளைவாக நானும், எனக்கு நண்பர்களாக இருந்த ஒரே துப்பாக்கியத்தால் அவர்களும், முழுசா இரண்டு நாட்கள் அந்த ஆசாமிக்கு ஏறக்குறைய கொத்தடிமைகளாக செயல்பட்டோம். இதில் உளவியல் ரீதியாக ஒரு விஷயம் என்னவென்றால்்மேற்படி ஆசாமி தனது ‘முணுக்’, ‘முணுக்' முன்கோபத்தால், அவ்வப்பொழுது வேலையை விட்டு கொண்டே இருந்தார். இப்படி அடிக்கடி நடந்ததால் ஒவ்வொரு அப்பாயிண்ட்மெண்ட்க்கும், ரிட்டயர்மென்ட்க்கும் இடையே போதிய இடைவெளிகள் இல்லாததால் கல்யாணமாகி எட்டு வருடங்கள் முடியும் முன்னரே வேலைக்கு ஒரேயடியாக முழுக்கு போட்டு விட்டார். அதனால்தான் அவருக்கு ஒரு மாதிரி சவலைப் பிள்ளை ட்ரீட்மென்ட் தான் கொடுக்க வேண்டியிருந்தது. இருக்கட்டும் கதைக்கு வருவோம்.
கல்யாணத்துக்கு முதல்நாள் விடிகாலையிலேயே, சென்னையில் இருந்தே டாக்ஸியில் வந்தார். ஆனால் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும். அங்கிருந்து மண்டபத்திற்கு ஆட்டோவில். "இஃப் யூ டோன்ட் மைண்ட்" என்று இவர் ஆரம்பித்துமே, ஆட்டோக்காரருக்கு நாங்கள் உடனே நூறு ரூபாயை கொடுக்க, பதிலேதும் சொல்லாமல் பாக்கியும் கொடுக்காமல் அவரே எடுத்துக் கொண்டார்! கேட்டால் பஸ் ஸ்டாண்டில் காபி கடையில் சண்டைபோட்ட மாப்பிள்ளையை பஞ்சாயத்து பண்ணி அழைத்து வந்ததற்கு சர்வீஸ் சார்ஜாம்!
அத்தோடு விடாமல் பஸ் ஸ்டாண்டில் போட்ட சண்டையின் தொடர்ச்சியாக, இங்கு வந்ததும் பரிசாரகரிடம் காபி சுமார் தான் என்று சொல்லி மீண்டும் ஒரு சண்டை. இன்னும் மாப்பிள்ளை அழைப்பு கூட ஆரம்பிக்கவில்லை ஆனால் அதற்குள் எங்கள் அப்பாவிடம் வந்து, நாளைக்கு ரிட்டன் டிக்கெட் ஃபர்ஸ்ட் கிளாஸ் வாங்கி கொடுக்க ஒரு "இஃப் யூ டோன்ட் மைண்ட்!". ரயிலில் பஸ்ட் கிளாஸ் ஏசி கிடைக்காததால்தான் டாக்ஸியில் வந்தாராம். ஒருவேளை பஸ்ட் கிளாஸ் ஏசி கிடைக்கவில்லை என்றால் தற்காலிகமாக தங்கி விடும் அபாயம் இருந்தது. எங்கள் போதாத காலம் இரவு 11 மணி ட்ரெயினில் ஃபர்ஸ்ட் ஏசி கிடைக்கவில்லை. நல்ல வேளையாக இரவு ரெண்டு மணி வண்டியில் கிடைத்தது. இல்லையென்றால் இங்கிருந்து சென்னைக்கு மீண்டும் டாக்சியில் போகிறேன் பேர்வழி என்று பழியாய் கிடந்தால் என்ன செய்வது?
இந்தக் கண்டத்தை தாண்டிய பின்,அன்று மாலை மாப்பிள்ளை அழைப்புக்கு போட்ட மெதுபக்கோடா அவருக்கு நெஞ்சை அடைப்பதாக ஒரு புகார். அதைத் தொடர்ந்து இன்னொரு "இஃப் யூ டோன்ட் மைண்டை" செலவு செய்தார். காளியாகுடி ஹோட்டலில் இருந்து பிரத்யேகமாக அவருக்கு மட்டும் டிபன் தருவிக்கப்பட்டது! இந்தப் பக்கமோ கல்யாண மாப்பிள்ளையே ' தேமே' என்று மெதுபக்கோடாவை விழுங்கி விட்டு நிதானமாக தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார்.
இரவு சீட்டு கச்சேரிக்கு பிளாஸ்டிக் கார்டு இல்லை என்று மேலும் ஒரு "இஃப் யூ டோன்ட் மைண்ட்". இரவு தூங்குவதற்கு இரண்டு பக்கமும் இரண்டு ஃபேன்கள் வேண்டுமென்று அதற்கும் ஒரு "இஃப் யூ டோன்ட் மைண்ட்" !
இதெல்லாம் கூட பரவாயில்லை. மறுநாள், கல்யாணம் நடத்தி வைத்துக்கொண்டிருந்த பிரகஸ்பதியிடம், ரொம்பத் தெரிஞ்ச மாதிரி ஏதோ மந்திரம் பற்றி எக்குத்தப்பாக பேசிவிட்டார். ருத்ரதாண்டவம் ஆடிய வாத்தியார் சுவாமி என் அப்பாவிடம் "மாப்பிள்ளை பிரமாதமா வாசிச்சுருக்கார் போல இருக்கே! அவரை வைத்து பாக்கி கல்யாண வேலைகளை நடத்திக்கோங்கோ!" என்று முறுக்கிக்கொண்டு போனவரை, ஏதோ காசி யாத்திரைக்கு போன மாப்பிள்ளையை அழைத்து வருவது போல 'தாஜா' பண்ண வேண்டியிருந்தது.
முகூர்த்த விருந்தில் அக்காரவடிசலில் அவருக்கு மட்டும் தனியாக ஒரு கிண்ணத்தில் நெய். கொலஸ்ட்ரால் இருக்கும் உடம்பு என்று எங்கப்பா சொல்லப் போக , அங்கேயும் அனாயாசமாக பிரயோகித்தார் வெகு பவ்யமாக "இஃப் யூ டோன்ட் மைண்ட்"! கும்பகோணம் வெத்தலையோடு, ரஷிக்லால் பாக்கு தான் வேண்டும் என்பதற்கு கூட ஒரு "இஃப் யூ டோன்ட் மைண்ட்".
அன்றிரவே அருள்வாக்கு சொல்வது போல 'மாயவரத்தில் பாதிரி மாமபழம் விசேஷமாமே, "இஃப் யூ டோன்ட் மைண்ட்". அது முடிந்தபின் பரிசாரகனிடம் என் மூலமாக (அவரிடம்தான் சண்டை போட்டாகி விட்டதே) ஒரு பெரிய ஹார்லிக்ஸ் பாட்டில் புளிக்காய்ச்சல் (இப்போது மட்டும் அக்காவாம்) மீண்டும் ஒரு "இஃப் யூ டோன்ட் மைண்ட்"
எனக்கு தெரிந்து சம்பந்தி வீட்டாரை விட எங்கள் வீட்டு மேற்படி மாப்பிள்ளைக்கு நாங்கள் செய்த சிசுருஷைகளைப் பார்த்துதானோ என்னவோ அவர்கள் மிரண்டு போய் ரொம்ப அனுசரணையாக நடந்து கொண்டார்கள் .
ஆக கல்யாண வேலைகள் தந்த சோர்வை விட, தூரத்து அத்தை வீட்டு மாப்பிள்ளையை கண் கலங்காமல் கவனித்ததுதான் பெரிய வேலையாக போய்விட்டது எங்களுக்கு. தூங்கி வழிந்த எங்கள் முகங்களில் 'மாயவரம் ஜங்ஷனில்' கூலரில் இருந்து எடுத்து குளிர்ந்த நீரை பளிச்சென்று அடித்துக் கொண்டு வந்த தூக்கத்தை வலியத் துரத்தினோம். நல்ல காலம். இரவு இரண்டு மணிக்கு சரியாக வந்த வண்டியில் மாப்பிள்ளையை பத்திரமாக ஏற்றி விட்டோம். சத்திரத்தில் விழித்திருந்த அப்பா, "ஏண்டா இவ்வளவு நாழி?"என்று கேட்டார். "இல்லையே 2 மணி வண்டியில் தானே ஏற்று விட்டு வருகிறோம்" என்றோம். ஒரு கணம் யோசித்த அப்பா ' எந்த தேதிக்கு டிக்கெட் வாங்கியிருந்தீர்கள்?' என்று கேட்டபோது, இதிலென்ன சந்தேகம் இன்றைய தேதிக்கு தான் !"என்றோம் கோரசாக. இரவு 2 மணி என்றால், ரயில்வே கணக்குப்படி நாளைய தேதிக்கு அல்லவா டிக்கெட் ரிசர்வ் செய்திருக்க வேண்டும்?" என்றார் திகிலோடு. ரிசர்வேஷன் பட்டியலை சரி பார்க்காமல் அவசரம் அவசரமாக பெரியப்பாவின் மாப்பிள்ளையை வண்டியில் திணித்தது அதுவரை ஞாபகம் வரவே இல்லை. அப்பா ரயில்வே ஊழியர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். இருந்தாலும் எங்களை உற்றுப் பார்த்து விட்டு மெலிதாக ஏனோ சிரித்தார்.
*********
ஃபேஷன் பேஷ் நன்னாருக்கு...
ReplyDeleteரயில் பெட்டில அந்தக் காலத்திலே லிஸ்ட் ஒட்டமாட்டானோ...அந்த படுபாவிப்பய....இப் யூ டோண்ட் மைண்ட்...அந்த லிஸ்டில பேர் வெரிபை பண்ணச்சொல்லியிருப்பாரோல்லியோ.....கஷ்டம் கஷ்டம்....👍👍
ஆமாம்! அவர் அவசர, அவசரமாக வண்டியேற்றி விட்டார்கள் என்று ஒருவரி சேர்த்திருந்திருக்கலாம். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
ReplyDeleteசேர்த்துவிட்டேன்.
Deleteசூப்பர். மாப்பிள்ளைகள் உஷார்!!!
ReplyDeleteபடுத்திய மாப்பிள்ளைக்கு நல்ல பாடம்
ReplyDelete