அம்மாவின் இடம்

       இதுநாள்வரை பெங்களூரில் இருந்த கிருஷ்ணனுக்கு அடுத்த மாதத்திலிருந்து அமெரிக்கா வாசம் பிராப்தி. பிள்ளை, பெண் மனைவியோடு சியாட்டிலுக்கு. ஆகவே அம்மா ஸ்ரீரங்கத்திற்கு. பேரன், பேத்தி, பாட்டியை கட்டிக் கொண்டு அழ, கிருஷ்ணன் மனைவியின் கண்களில் துளிர்த்த கண்ணீர் இது போதும்தானே என்று கேட்டு நின்றது. குழந்தைகள் கொஞ்சம் வளரும்வரை காத்திருந்தான் போலிருக்கிறது. இப்பொழுது வெளிநாட்டிற்கு கம்பெனியில் அனுப்புகிறார்கள் என்று புளுகிவிட்டு (அதுவும், ஏதோ புது கம்பெனியில் சேர்வதற்கு) கிளம்புகிறான். நாளைக்கு மறு நாள் அப்பாவின் ஏழாவது ஸ்ரார்த்தத்திற்கு கூட இருக்கப் போவதில்லையாம். 

        அப்பா மறைந்த உடனேயே என்னைக் கேட்காமலேயே வலுக்கட்டாயமாக அம்மாவை அழைத்துக் கொண்டு போனபோது அவன் பாசத்தை நினைத்து எனக்கு சந்தோஷமாக இருந்தது. பின்னர் சந்தேகமாக மாறி வலுப்பெற்று இப்போது அமெரிக்காவில் கரை கடக்கிறது. இந்த விஷயத்தில் தனது ஓரகத்தியைப் பற்றி எனது மனைவி நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள். சில சமயங்களில் இரண்டு குடும்ப அங்கத்தினர்களும் இது சம்பந்தமாக பேசும்பொழுது, அவள் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தும் பொருட்டு அவ்வப்பொழுது வாயைக் கோணிக் கொள்வாள். என் தம்பியின் வெளிநாட்டு விஜயத்தை, "குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். அதான்!" என்று ரத்தினச் சுருக்கமாக புரிய வைத்து விட்டாள்.

          போகட்டும். ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும். அம்மா வந்தவுடன் எனது உடனடி தீர்மானங்கள்: கண்டிப்பாக 'இதைச் செய்! அதைச் செய்யாதே!' என்றெல்லாம் சொல்லக் கூடாது. அம்மா பழைய அம்மா இல்லை: ஸ்ரீரங்கமும் அதே ஸ்ரீரங்கம் இல்லை. வயது முதிர்ந்தாலும் நினைவுகள் பழையதாக இருப்பதால், இந்த நடைமுறை சிக்கல். யாருக்கும் மனவருத்தம் ஏற்படாமல் கையாள வேண்டும் என்பதை நம்பிக்கையின்றி பெரிய பெருமாளிடம் பிரார்த்தித்துக் கொண்டேன்.

        கண்டிப்பாக, 'கொள்ளிடம் போக வேண்டாம்,' என்று சொல்லலாமா? ஆமாம், இல்லையென்றால் ஸ்நானம் செய்த கையோடு, ஈரத் துணிகளை தோள்களில் போட்டுக்கொண்டு சாணியை பொறுக்கிக் கொண்டு வருவாள். வடக்கு வாசல்களில் பன்றிகளும் ஓடும் என்பதால் உஷத் காலத்தில் திரட்டுவது உத்தரவாதமாக பசுஞ்சாணியாக மட்டுமே இருக்காது, அதையெல்லாம் விட முக்கியம் நாங்கள் இருக்கும் இரண்டாவது மாடியில் பசுஞ்சாணிக்கு வேலையே இல்லை.

         அடுத்தாற்போல், தினமும் காலையில் தாயார் சன்னதிக்கு போகிறேன் என்று அடித்துப் பிடித்துக் கொண்டு ரிக்ஷாவில்கூட போக அனுமதிக்கக்கூடாது. போனால் திரும்பி வரும்வரை பயம். வயிற்றில் நெருப்புதான்.

            இது தவிர உபரியாக கூட்டிக்கொண்ட பயம்: அம்மாவின் வயதொத்த தோழிகள் தத்தம் ஆத்துக்காரர்களை வைகுண்டத்திற்கு அனுப்பிவிட்டு, ஸ்லோகக் கிளாஸ், காலட்சேபம் என தங்களையும் தயார் பண்ணிக் கொள்ள இங்கேயும் அங்கேயும் போய்க் கொண்டிருக்கிறார்கள். எங்காவது, "எப்டிடீ இருக்க அம்புஜம்?" என்று யாராவது நண்பிக்கிழவி வந்து அம்மாவை கூட்டு சேர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

      எப்படி இருந்தாலும் உடனடியாக வாயை திறப்பதாக உத்தேசம் இல்லை.

         நாளைக்கு சிரார்த்தம். அதாவது இன்றைக்கு ஒருபொழுது. ஸ்ரீதர் வாத்தியாருக்கு ஞாபகப்படுத்தி விட்டேன். திவசம் முடிந்து எல்லோரும் சாப்பிடும்போது மூன்று மணி. சுவாமிகள் இலைகளை கொள்ளிடத்தில் சேர்த்துவிட்டு வந்தவுடன், பரம திருப்தி அம்மாவுக்கு. பெங்களூரில் ஏதோ ஒரு மடத்தில் அவதி அவதியாக சிரார்த்தம் செய்து விட்டு, கையோடு கருநீலக் குழாய்களை மாட்டிக் கொண்டு ஆபிசுக்கு தன் பெரிய பையன் ஓடுவது ஞாபகம் வந்தது- பாவம் அவன் என்ன பண்ணுவான்? அவன் உத்தியோகம் அப்படி!

      இதுதான் சமயம் என்று அம்மாவிடம் மெதுவாக எனது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தத் தயாரானேன். அவள் என்ன சொன்னாலும் அமைதியாக கேட்டுக் கொள்ள வேண்டும் என்கிற திடசங்கல்பம் செய்துகொண்டேன். 

     ஆனால், எதிர்பாராதவிதமாக அம்மாவே முந்திக்கொண்டு, 'என்னப்பா?' என்று கேட்க, வாராத தலை மயிரும், ஒரு வாரம் வளர்ந்த தாடியும், கோணல் மாணலான பன்னிரு திருமண் காப்புகளுடனும், திவசத்தன்று தோன்றும் கூடுதல் சோர்வு உடலில் போர்த்திக் கொண்டு குரலில் ஆயாசம் வெளிப்பட 'என்னம்மா?' என்றேன். இதுதான் சரியான நேரம் என நினைத்தோ என்னவோ நான் பேச முற்படும் முன், 'வெங்கு கண்ணா! எனக்கு சில ஒத்தாசைகள் பண்றயா?' என்ற அம்மாவின் இறைஞ்சலான குரலுக்கு , சற்று மேல் நோக்கி தலையை உயர்த்தி கண்களால் '!?' எனக் கேட்டேன். 

     "முதல்ல பாத்ரூம்ல எனக்கு வெஸ்டர்ன் போட்டுக் கொடுத்துடு. முடிஞ்சா பழைய சொரசொரப்பு தரையா இருந்தா தேவலாம். ஏன்னா, படிக்கு பாதி பேருக்கு பாத்ரூம்ல வழிக்கி விழுந்துதான், திருமங்கை மன்னன் படித்துறைக்கு புறப்பாடு ஆறது!" அது சென்னைக்கு கண்ணம்மாபேட்டை மாதிரி.

      "அப்புறம் இப்ப எல்லாம் எனக்கு கை கால் ஓஞ்சு போச்சு! போன தடவை பெங்களூரில் கீழ் விழுந்து கையை ஒடச்சிண்டாச்சு." (அடப்பாவி, நமக்கு சொல்லவே இல்லையே!) "நேத்திக்கும், இன்னிக்கும் , இரண்டு நாள் புடவை கட்டிக்கவே பாதி பிராணன் போயிடுத்து. அதனால மீடியம் சைஸ்ல 4 நைட்டி வாங்கி கொடுத்துடு.

     "அப்புறமா, என்கிட்ட நிறைய வேளுக்குடி கிருஷ்ணன் சிடி எல்லாம் இருக்கு. அதை நான் உட்கார்ந்த இடத்திலிருந்து கேக்குறதுக்கு, அதுக்குன்னு இருக்கிற ஏதாவது ஒரு ரேடியோ டப்பா வாங்கித்தா!

        "முடிஞ்சா இன்னொரு ஒத்தாசையும் எனக்கு பண்ணு. பெருமாள் உனக்கு பத்து வருஷம் கழிச்சு குழந்தைகளை கொடுத்தது கூட ஒரு விதத்தில் நல்லதுதான். என்னால முடிஞ்ச வரைக்கும் உன்னோட குழந்தைகளுக்கு குட்டி குட்டி ஸ்லோகங்கள் எல்லாம் சொல்லித் தரேன். அதுக பெரியவாளா போனா கூட மனசுல எப்பவும் தைரியத்தை கொடுக்கும். இப்ப எல்லாம் படிப்பாக இருந்தாலும் சரி, வேலை பார்த்தாலும் சரி தனித்தனி ரூம்! அதுகளுக்கு ஒவ்வொரு சமயம் இருட்டுல பயந்துண்டாக் கூட வெளியில் சொல்ல தெரியல! பாவம்!" இப்போது 'ஒரு சின்ன கமர்ஷியல் பிரேக்' என்று சொல்லாமல் இடைவெளி விட்டார்.

         மீண்டும் நினைவு வந்தவராக, "எதுக்குன்னா வெங்கு, அப்புறம் நான் இங்கே இருக்கிறதுல என்னாலே ஏதாவது ஒரு பிரயோஜனமாவது இருக்க வேண்டாமா? அதுக்கு சொல்றேன்," என்று சொல்லிவிட்டு, சம்பந்தமில்லாமல் ஏதோ ஒரு இடத்தை உத்தேசமாக பார்த்துக்கொண்டே, சுருங்கி, உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க மெலிந்த தனது விரல்களை ஆட்டினார் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த பெரியபெருமாள் படத்தை நோக்கி.

      "அப்புறம் குழந்தைகள் அதது காலா காலத்துல வளர்ந்து தன்னோட வேலையை பார்க்க போறது! நாம கூப்பிட்டா கூட கிட்ட வரப் போவதில்லை," என்று இயலாமையும் ஏக்கமும் தோய்ந்த குரலில் சொன்னபோது, "பசங்களுக்கு இனிமே பிரைவசி வேணும்" என்று தன்னுடைய மூத்த மாட்டுப்பெண் ரகசியமாக கிருஷ்ணனிடம் சொன்னதை ஜாக்கிரதையாக தவிர்த்திருந்தாள். கிருஷ்ணன் இதையும் அம்மாவிடம் சொல்லி வைத்திருக்க வேண்டாம். 

        என் பதிலை எதிர்பார்க்காத அம்மா மெதுவாக நடந்து போய் பச்சை கலர் நாகப்பட்டினம் டிரங்குப் பெட்டியை மெதுவாக திறந்து, தனது பேங்க் பாஸ் புக், ஏடிஎம் கார்டு, அப்புறம் பிஞ்சின் புக் எடுத்து வந்து நீட்டினாள். 'என்ன சொல்ற?' என்று கேட்டாள்.

               அவள் கேட்ட கேள்விக்கு பதில் மட்டுமல்ல, நான் கேட்க இருந்த கேள்விகளும் இல்லாமல் போயிருந்தன. என்னால் எதுவும் பேச முடியவில்லை, அம்மா என்னைக் குழப்பமாக பார்த்துக்கொண்டே இருந்தாள்.

Comments